கே.வி. ஆனந்தை இதற்காக கேலி செய்தார்களாம்!
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படம் வரும் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், தமிழில் தலைப்பு வைப்பதற்காக தன்னை சிலர் கிண்டல் செய்தனர் எனக் கூறியுள்ளார்.
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் என தொடர்ந்து தனது படங்களுக்கு தமிழில் தலைப்புகளை தேர்வு செய்து வைத்து வருகிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த்.
சூர்யாவுடன், அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து தற்போது காப்பான் படத்திலும் இணைந்து பணியாற்றியுள்ள கே.வி. ஆனந்த், சமீபத்தில் நடந்த காப்பான் பட நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, தமிழில் தலைப்பு வைப்பதற்க்காக தன்னை சிலர் கிண்டல் அடித்தனர் என்றும், கோ என அரசன் பொருள் படும்படி தலைப்பு வைத்த போது, என்ன மாட்டை வைத்தா படம் எடுக்கிறீர்கள் என கிண்டல் அடித்தார்கள் என்பதை மன வருத்தத்துடன் கே.வி. ஆனந்த் கூறியுள்ளார்.
தமிழில் படங்களுக்கு தலைப்பு வைத்தால் வரி விதிவிலக்கு இருந்து வந்த நிலையில், பலரும் வரி விதிவிலக்குக்காக தமிழ் தலைப்புகளை கட்டாயத்தின் பேரில் வைத்தனர். ஆனால், தற்போது அதற்கும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டும் என்பதால், ஆங்கிலம் மற்றும் இந்தி டைட்டில்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையிலும், தமிழ் தலைப்புகளை மட்டுமே தேடி வைத்து வருகிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த் என்பது பாராட்டுக்குரிய விசயம் தான்.