பரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.. வைகோ பேட்டி

காஷ்மீர் மாநிலமே ஒரு சிறையாக மாற்றப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆக.5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நிகழக் கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்பட 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மதிமுக நேற்று மாநாடு நடத்தியது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியாததால், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தது. பரூக் அப்துல்லாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவிக்க வேண்டுமென்று அதில் கோரப்பட்டது.

இம்மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் பாப்டே, நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காஷ்மீர் மாநில நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:காஷ்மீ்ர் மாநிலமே சிறையாக மாற்றப்பட்டு விட்டது. எனது வழக்கறிஞர் அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டில் வலுவான ஆதாரங்களை முன்வைத்துள்ளார். காஷ்மீர் மாநில மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும். இதுவே எனது முதல் இலக்கு. சரியான நேரத்தில் ஸ்ரீநகருக்கு சென்று பரூக் அப்துல்லாவை நேரில் சந்திப்பேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

More News >>