மோடிக்கு 69வது பிறந்தநாள்.. சர்தார் சரோவர் அணைக்கு வருகை..
பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்று 69வது பிறந்த நாள். இதையொட்டி குஜராத்திற்கு சென்ற அவர், முதல் முறையாக நிரம்பியுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பார்வையிட்டார்.
தனது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி நேற்றிரவே சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்தார். இன்று காலையில் அவர் கேவாடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்றார். குஜராத் முதல்வராக அவர் இருந்த போது கட்டப்பட்ட இந்த அணையை அவர் கடந்த 2017ம் ஆண்டில்தான் திறந்து வைத்தார்.
தற்போது இந்த அணையில் முதல் முறையாக 138.68 அடி உயரத்திற்கு நீர் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பியிருப்பதையும், இதமான மழைச் சாரலில் அணையின் அழகையும் பார்த்து ரசிப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை இங்கு வருகை புரிந்தார்.
இங்கு அவர் ஆட்சியில் கட்டப்பட்டு கடந்த ஆண்டில் திறக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கும் அவர் சென்று பார்வையிட்டார். இந்த சிலைக்கு ஒற்றுமையின் சின்னம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
பின்னர், கல்வானி சுற்றுச்சூழல் பூங்காவையும் பிரதமர் பார்வையிட்டார். நர்மதா நதிக்கரையில் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டார்.
இதைத் தொடர்ந்து தனது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெறுவதற்கு பிரதமர் செல்கிறார். மேலும், குருதேஸ்வரர் கோயில், குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் ஆகியவற்றுக்கும் பிரதமர் செல்கிறார். தொடர்ந்து பிஜேபி பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றவிருக்கிறார்.