எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை: கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.

எல்பிஜி டேங்கர் லாரிகளின் டெண்டர் முறையை மத்திய அரசு மாற்றியமைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும், பழைய முறையையே பின்பற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12ம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் சுமார் 4500 எல்பிஜி டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி எல்பிஜி லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இந்த வேலை நிறுத்தம் போராட்டம் தொடர்ந்தது. ஆனால், எரிவாயு நிரப்பும் பணி முற்றுலுமாக முடங்கியதை அடுத்து, தமிழகம் உள்பட 6 மாநிலங்களிலும் சமையல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது.

இதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி எண்ணெய் நிறுவனங்கள் உள்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்கவும் சம்மதம் தெரிவித்தனர்.இதையடுத்த, ஐந்து நாளாக நடந்து வந்த வேலை நிறுத்தம் போராட்டத்தை கைவிட்டனர். இதனை, இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கூடி ஆலோசனை நடத்திய பிறகு, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

More News >>