ராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. 6 பகுஜன் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்..

ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அங்கு மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் 100 இடங்களையும், பாஜக 72 இடங்களையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 6 இடங்களையும், மீதி இடங்களை மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் பிடித்தன.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறவே, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவற்றை கவிழ்ப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்யத் தொடங்கியது. கோவாவில் பாஜக ஆளும் கட்சியாக இருந்த போதும், காங்கிரசில் இருந்த 15 எம்.எல்.ஏ.க்களில் 10 பேரை இழுத்தது. கர்நாடகாவில் இதே போல் காங்கிரஸ், மஜத கட்சியின் 13 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்தது. இப்போது அங்கு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி ஏற்பட்டுள்ளது.

இதே போல், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பாஜக முயன்றது. இது பற்றி பாஜக தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே பேசினர். இந்த 2 மாநிலங்களிலும் காங்கிரசில் இருந்து பத்து எம்.எல்.ஏ.க்களை இழுத்தாலே, பாஜக ஆட்சியைப் பிடித்து விடலாம்.

இந்நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். முதல்வர் கெலாட் மற்றும் சபாநாயகர் சி.பி.ஜோஷியை சந்தித்து அவர்கள் 6 பேரும் இதை தெரிவித்தனர். பகுஜன் கட்சியில் உள்ள ராஜேந்திர குட், ஜோகேந்திர சிங், வாஜிப் அலி, லக்கான்சிங் மீனா, சந்தீப் யாதவ், தீப்சந்த் கேரியா ஆகிய 6 பேரும் ஒட்டுமொத்தமாக கட்சி தாவுவதால், கட்சித் தாவல் தடைச் சட்டம் அவர்கள் மீது பாயாது.

தற்போது அம்மாநில சட்டசபையில் காங்கிரசின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மொத்தம் உள்ள 13 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, காங்கிரஸ் ஆட்சியை பாஜகவால் கவிழ்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் மெகா கூட்டணியில் காங்கிரசை மாயாவதி சேர்க்க மறுத்துவிட்டதால், அங்கு எளிதாக பாஜக வென்றது. ஆனால், அதற்குப் பிறகும் மாயாவதியிடம் சோனியா மிகவும் நட்பாக இருந்து வந்தார். தற்போது இந்த கட்சித்தாவல் இரு கட்சிகளுக்கும் இடையே மோதலை உருவாக்கலாம்.

More News >>