ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதலில் இரண்டு அணிகளும் உலக சாதனை!

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 5ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட் டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அவர், 54 பந்துகளில் [6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்] 105 ரன்கள் எடுத்தார். அவர் 49 பந்துகளில் சதம் விளாசினார்.

இதன் மூலம் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, பிரண்டன் மெக்கல்லம் 50 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அதேபோல், சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலிலும் மெக்கல்லத்தை [2,140 ரன்கள்] பின்னுக்கு தள்ளி 2,188 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 1,956 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அதேபோல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கொலின் மன்றோ 33 பந்துகளில் [6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்] 76 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 132 ரன்கள் குவித்தனர். இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் [சராசரி 12.15] குவித்தது.

பின்னர், 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 24 பந்துகளில் [4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 59 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த லைன் 18 ரன்களில் வெளியேறினார்.

ஆனால், மற்றொரு தொடக்க வீரர் டி’ஆர்ஸி ஷார்ட் 44 பந்துகளில் [8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 76 ரன்களும், மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 31 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 14 பந்துகளில் 36 ரன்களும் எடுக்க 18.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து புதிய வரலாறு படைத்தது.

டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற சிறப்பு பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றது. இதற்கு முன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 236 ரன்களையும், இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 230 ரன்களையும் சேசிங் செய்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

அதேபோல் இந்த போட்டியில் 32 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. இதற்கு முன்னதாக 2016ஆம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் 32 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இப்போது அந்த சாதனை சமன் ஆகியுள்ளது.

More News >>