அயோத்தி வழக்கு விசாரணை.. அக்.18க்குள் முடிக்க உத்தரவு.. தலைமை நீதிபதி அறிவிப்பு
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.
கடந்த 25 நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையை இன்னும் எத்தனை நாட்களில் நடத்தி முடிப்பது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நேற்று முஸ்லிம் அமைப்பு தரப்பில் வாதாடும் சீனியர் வக்கீல் ராஜீவ்தவானிடம் கேட்டனர். மேலும், வாதங்களை முடிக்க எத்தனை நாட்கள் தேவை என்ற கால அட்டவணையை தயாரித்து தருமாறு கூறினார்,
இதைத் தொடர்ந்து, இன்று அயோத்தி வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் ஏற்கனவே கலந்தாலோசித்து கொடுத்த பட்டியலை தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். இதன்பின், எல்லோரும் ஏற்றுக் கொண்டதற்கு ஏற்ப அக்டோபர் 18ம் தேதியை கடைசி நாளாக கொண்டு இந்த வழக்கை விசாரித்து முடிக்கலாம் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். தேவைப்பட்டால் தினமும் ஒரு மணி நேரம் விசாரணையை நடத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி நவம்பர் 17ம்தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அக்டோபர் 18க்குள் விசாரித்து முடித்தால்தான், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக தீர்ப்பை வெளியிட வாய்ப்பிருக்கும். எனவே, அக்டோபர் 18க்குள் வழக்கின் விசாரணை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.