இ-சிகரெட்டுகளுக்கு தடை.. நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு
நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை கூட்டம், புதன்கிழமைகளில் நடைபெறும். இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:இ- சிகரெட்டுகளுக்கு முழு தடை விதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, இனிமேல் இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, இறக்குமதி, ஏற்றுமதி செய்யவோ முழு தடை விதிக்கப்படுகிறது. இவற்றை ஸ்டாக் வைத்திருக்கவும், போக்குவரத்து செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் என்று அனைத்திற்கும் தடை பொருந்தும்.
பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைச்சரவைக் குழு ஆய்வு செய்து இந்த முடிவை எடுத்துள்ளது. இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் விரைவில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முறையான சட்டம் இயற்றப்படும்.
இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.