காதலர் தினத்தில் கொடூரம் - காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை தீ வைத்து எரித்த வாலிபர்
மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டைச் சேர்ந்த பாலமுருகன் (23) என்பவர், அச்சம்பட்டி பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்த காவலர்கள் அவரை கைது செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று பள்ளி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை வழிமறித்து தன்னை காதலிக்கும்படி மீண்டும் கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு மாணவி மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு பாலமுருகன் தலைமறைவாகிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி தனிப்படை அமைத்து பாலமுருகனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் மறைந்திருந்த பாலமுருகனை தனிப்படை காவலர்கள் கைது செய்தனர். காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.