மோடியிடம் அரசியல் பேசவில்லை.. சந்திப்புக்கு பின் மம்தா பேட்டி.. அமித்ஷாவையும் சந்திக்கிறார்.
பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அவருடன், மேற்கு வங்க வளர்ச்சித் திட்டங்கள் பற்றி மட்டுமே பேசினேன். அரசியல் பேசவில்லை என்று சந்திப்புக்குப் பின்பு மம்தா தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடியையும், அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்தவர். தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியை உடைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டது.
இதனால், மம்தா ஆத்திரமடைந்து பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். இந்த மோதல் காரணமாக, பிரதமரை மம்தா சந்திக்காமல் இருந்தார். தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பாஜகவும், திரிணாமுல் கட்சியினருக்கும் இடையே பயங்கர மோதல்கள் நடைபெற்றன. கலவரங்கள் வெடித்தன. தற்போதுதான் அவை ஓய்ந்திருக்கிறது.
இந்நிலையில், மோடி 2வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக அவரை மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். மேற்கு வங்கத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதியுதவி குறித்தும் பிரதமரிடம் மம்தா பேசியிருக்கிறார். மேலும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் பிரதமரிடம் மம்தா கேட்டறிந்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு, பாஜக பக்கமாக திரிணாமுல் சாயலாம் என்றும், காங்கிரஸை தனிமைப்படுத்தி முழுமையாக அழித்து விட பாஜக நினைக்கிறது, அதனால் மம்தாவை காங்கிரசுடன் சேர விடாமல் தடுக்க பார்க்கிறது என்றும் அரசியல் வட்டாரங்களில் யூகங்கள் கிளம்பின. ஆனால், பிரதமருடன் அரசியல் எதுவும் பேசவில்லை என்று மம்தா மறுத்தார்.
பிரதமரை சந்தித்த பின், மம்தா கூறுகையில், பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. பிர்பூம் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு அவரை அழைத்தேன். மேற்கு வங்கத்தின் பெயரை பங்கலா என்று மாற்றுவதற்கான அனுமதியைக் கேட்டேன். மத்திய அரசிடம் இருந்து ரூ.13,500 கோடி தர வேண்டியிருப்பதைச் சுட்டிக்காட்டினேன். பி.எஸ்.என்.எல், ராணுவத் தளவாட தொழிற்சாலை, ரயில்வே திட்டங்கள் ஆகியவை குறித்து பேசினேன். தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசவில்லை. அது அசாமிற்கு மட்டுமே பொருந்தும்.
முன்பு, நான் டெல்லிக்கு வரும் போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் சந்திப்பேன். அந்த அடிப்படையில் இப்போது அமித்ஷாவை சந்திக்க முயற்சிப்பேன். அவர் நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன் என்றார்