ஏவுகணை தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான்... ஆதாரம் சிக்கியதாக சவுதி தகவல்

சவுதி எண்ணெய் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் ஈரான் உள்ளதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலுக்கு பொறப்பேற்றிருந்தாலும் அவர்கள் தாக்கவில்லை என்றும் சவுதி அரசு கூறியுள்ளது.

சவுதி அரசிற்கு சொந்தமான அரம்கோ எமெர்ஜென்சி நிறுவனத்தின் அப்கைக் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் கடந்த 2 நாட்களுக்கு ட்ரோன் ஏவுகணைகள் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, குர் ஆய்சில் உள்ள அதே நிறுவனத்தின் எண்ணெய் வயலிலும் தாக்குதல் நடந்தது. இதனால் இரு இடங்களிலும் தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியாவின் எதிரியான ஈரான் நாடுதான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. மேலும், தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் கூறியது. ஏற்கனவே, ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை கூறினாலும், ஈரான் அதை மறுத்தது. இதற்கிடையே, ஏமன் நாட்டில் அரசிற்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் ராணுவ செய்தி தொடர்பாளர் துர்க்கி அல் மாலிக்கி, ரியாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சவுதியின் 2 இடங்களில் நடந்த ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானே உள்ளது. தாக்குதல் நடந்த இடங்களில் சேகரித்த ஆயுதச் சிதறல்களின் மூலம் அவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரிகிறது.

மேலும், ஈரான் ஆதரவு பெற்று இயங்கும் ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இந்த தாக்குதலை நடத்தியிருக்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் தாக்குதலுக்கு ஏவுகணை ஏவப்பட்ட இடம், சவுதிக்கு வடக்கில்தான் உள்ளது சரியான ஏவுதளம் பகுதியை காண்பதற்கு உரிய முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதை கண்டுபிடிப்பதன் மூலம் ஈரானில் எங்கிருந்து ஏவப்பட்டது என்பதையும் தெரிவிப்போம். சுமார் 25 ட்ரோன்களில் வெடிமருந்துகள் அனுப்பி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

தாக்குதலுக்கு ஈரான் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டிய போது, அதற்கு ஆதாரம் கிடைக்காமல் நாங்கள் அந்த குற்றச்சாட்டை ஏற்கவில்லை என்று சவுதி அரசு கூறிவந்தது. இந்நிலையில், அந்நாடு தற்போது ஈரானே காரணம் என்று கூறியிருக்கிறது.

More News >>