என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்.. விஜய்யின் முழு பேச்சு இதோ!
என் படத்தை உடைங்க, பேனர்களை கிழியுங்கள்; ஆனா, என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிகில் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை முதல் இரவு வரை இந்தியளவில் டிரெண்டாகி இருந்தது. புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்து சாதுவாக இருந்து வந்த விஜய் சீறி பாய ஆரம்பித்துள்ளார்.
மெர்சல், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் அசத்தல் பேச்சு பேசி வந்த நடிகர் விஜய், நேற்று வெறித்தனமான பேச்சு மற்றும் உடல் பாவணையால் ரசிகர்களுக்கு நேற்றே தீபாவளி விருந்தினை பரிசாக அளித்தார்.
வாழ்க்கை கூட ஒரு கால்பந்தாட்ட போட்டி தான் நம்மள கோல் போட விடாம பல பேர் தடுப்பாங்க.. சில நேரம் நம்ம கூட இருக்கிறவங்களே சேம் சைட் கோல் போடுவாங்க என்று தனது பேச்சை துவங்கிய விஜய், சுபஸ்ரீ விவகாரத்தை எடுத்து பேசிய நடிகர் விஜய், யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விடுத்து, பேனர் அடிச்சவன், லாரி டிரைவரலாம் கைது பண்றாங்க இதுக்கு ஒரு ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் பண்ணுங்க என தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டார். அதே போல, டிவிட்டர் போர் அளவோடு இருக்க வேண்டும் என்று ரியல் கட்டளையும் பிறபித்தார்.
மேலும், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவர்களை அங்கே வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும் என அரசியல்வாதிகளுக்கு ஒரு பன்ச் கொடுத்துவிட்டு, யோகி பாபு தனது வீட்டு கிரக பிரவேஷத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை குறிப்பிட்ட விஜய் கல்யாணத்தை மிஸ் பண்ணிடாத யோகி என குறும்பாக பேசினார்.
சுட சுட ஆவி பறக்கும், அது இட்லி ஆனாலும் சரி அட்லி ஆனாலும் சரி என தனது செல்ல இயக்குநருக்கு ஒரு பன்ச் மூலம் பாராட்டிய விஜய், நடிகை நயன்தாரா குறித்தும் பாராட்டினார்.
பின்னர், எனது படங்களை உடையுங்கள், பேனர்களை கிழியுங்கள் ஆனா, என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என தனது எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் விஜய் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும், குட்டி கதையாக எம்.ஜி.ஆர் ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்த போது, கலைஞர் பற்றி தப்பாக பேசிய அரசியல்வாதி ஒருவரை காரில் இருந்து இறக்கி விட்டதாகவும், எதிரியாக இருந்தாலும் மரியாதை கொடுக்கணும் என்றும் கூறி அந்த குட்டிக் கதையை முடித்தார்.
வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு பிகில் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ள நிலையில், விஜய் பேசிய அத்தனை பேச்சுக்களும் சின்ன சின்ன வீடியோ க்ளிப்களாக வாட்சப் ஸ்டேட்டஸ்களாக வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.