சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள்.. நிதின் கட்கரி தகவல்..

சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம், செப்.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.100 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு குஜராத், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்பட பாஜக ஆளும் மாநிலங்கள் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லியில் நேற்று அனைத்து போக்குவரத்து சங்கங்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. நாடு முழுவதும் சரக்கு லாரிகள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது:

புதிய சட்டம் கொண்டு வந்ததில் அரசியல் எதுவும் இல்லை. கவர்ச்சி அரசியலுக்காக சட்டம் வரவில்லை. சாலை விபத்துகள் நடப்பதை தடுப்பதற்காக, மக்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம். ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் 65 சதவீதம் பேர், 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இது நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் கூட 2 சதவீதம் அளவுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.

சாலை விபத்தில் மகன், மகள்களை இழக்கும் பெற்றோரின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு இல்லையா? போக்குவரத்து விதிமீறல் செய்தால்தான் அபராதம் விதிக்கப்படுகிறதே தவிர, விதிகளை கடைபிடிப்பவர்களுக்கு அல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட அபராதத் தொகையை உயர்த்தியது தவறா? இப்போது ரூ.100 எல்லாம் ஒரு பணமா? இப்படி அபராதம் விதிப்பதால், மத்திய அரசுக்கு எந்த லாபமும் கிடையாது. மாநிலங்களுக்குத்தான் அந்த தொகை செல்கிறது. அது கூட வருவாய்க்காக இந்த சட்டம் கொண்டு வரவில்லை. உயிர்களை காப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை முதலில் லோக்சபாவில் விவாதித்து, அனைத்து கட்சிகள் அடங்கிய குழுவை அமைத்து அவற்றை சரிபார்த்து அதன்பின்பு தான் நிறைவேற்றினோம். இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

More News >>