கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது - ஜி.கே. வாசன்

கைத்தறி நெசவாளர்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவெடுத்த பிறகும் இதுவரையில் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில வருடங்களாக முன்வைத்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இவர்கள் கைத்தறி நெசவு செய்து வருகின்ற வேலையில் தங்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர். அது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 30 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டும் இதுவரையில் கூலி உயர்வு வழங்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதே போல கைத்தறி பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கும் 30 சதவீத கூலி உயர்வு வழங்கப்படவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.

எனவே கூட்டுறவு மற்றும் தனியார் பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வான 30 சதவீதத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கூட்டுறவு சங்க நெசவாளர்கள் வருடத்திற்கு உற்பத்தி செய்யும் மொத்த உற்பத்திக்கு ஏற்ப குறைந்தபட்சம் 8.44 சதவீதம் போனஸ் அவர்களுக்கு வழங்க வேண்டும். தனியார் பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் நீண்ட கால வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள பட்டுப்புடவைகளுக்கு 50 சதவீத தள்ளுபடி மானியம் வழங்கினால் தேக்கமடைந்துள்ள ஏராளமான பட்டுப்புடவைகள் விற்பனையாகி வருவாய் ஈட்ட முடியும்.

மேலும் மத்திய அரசு - பட்டின் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக கைத்தறி நெசவுக்கு தேவைப்படும் கோரப்பட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தனியார் உள்ளிட்ட அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் அடையாள அட்டைகள், மருத்துவ காப்பீட்டு அட்டைகள் ஆகியவற்றை தடையில்லாமல், விடுபடாமல், தாமதப்படுத்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்கள் கடந்த சில வருடங்களாகவே பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியாமல், விலைவாசியும் உயர்ந்து வருகின்ற வேலையில், கிடைக்கின்ற குறைந்த வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்ல குறைந்த வருவாயில், குடும்பத்தின் அன்றாட செலவுக்கே போதிய பொருளாதாரம் இல்லாத நிலையில், நெசவுத்தொழிலுக்காக வாங்கிய வங்கிக்கடனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இத்தகைய இக்கட்டான சூழலில் நெசவாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பட்டுக்கு ஜிஎஸ்டி வரி கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன் வைக்கின்றனர். இந்த கோரிக்கைகளை எல்லாம் மத்திய மாநில அரசுகள் முக்கிய கவனத்தில் கொண்டு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்.” இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

More News >>