திருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் சேகர்ரெட்டி நுழைந்தது எப்படி? பரபரப்பு தகவல்..
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததும், திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டு கலைக்கப்பட்டது. இதையடுத்து, அந்த போர்டு சேர்மன் பதவியில் தனது தாய் வழி மாமாவான ஒய்.வி.சுப்பாரெட்டியை நியமித்தார். சுப்பாரெட்டி கிறிஸ்துவர் என்றும் அவரை நியமிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பி, சில நாட்களில் அது அடங்கி விட்டது.
தற்போது, திருமலா-திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் போர்டுக்கு 24 உறுப்பினர்களை நியமித்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆந்திராவைச் சேர்ந்த 8 பேர், தெலங்கானாவின் 7 பேர், தமிழ்நாட்டின் 4 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் டெல்லி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலா ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா சிமென்ட்ஸ் தலைவர் என்.சீனிவாசன், உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, டாக்டர் நிசித்தா முப்பாவரப்பு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த குமரகுரு, எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர விசுவாசி ஆவார்.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த டிரஸ்ட்டில் இவர் தமிழ்நாட்டுக்கான உள்ளூர் ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் தமிழ்நாட்டில் மணல் விற்பனையில் கொடிகட்டி பறந்தவர். கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, ரூ.1000, ரூ.500 செல்லாதவையாக மோடியால் அறிவிக்கப்பட்டது அல்லவா? அதைத் தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் அது தட்டுப்பாடாக இருந்ததால், சில மாதங்கள் வரை ஒவ்வொருக்கும் தினமும் இரண்டு, மூன்று நோட்டுகளே வங்கிகளில் தரப்பட்டது.
ஆனால், அதே டிசம்பர் மாதத்தில் சேகர் ரெட்டியின் சென்னை வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதில் ரூ.100 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், தங்கக்கட்டிகளும் சிக்கின. அதைத் தொடர்ந்து வருமான வரித் துறை, சிபிஐ ஆகியவை அவர் மீது வழக்குகள் தொடுத்தன. அந்த சமயத்தில் சேகர் ரெட்டியும், ஓ.பன்னீர்செல்வமும் மொட்டை அடித்து திருப்பதி கோயில் வாயிலில் நிற்பது போன்ற படங்கள் வெளியாகின.
தமிழக அரசில் சேகர் ரெட்டி எவ்வளவு செல்வாக்கு பெற்றிருக்கிறார் என்றும், மணல் மாபியா என்றும் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. இதையடுத்து, அவர் திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது அந்த போர்டில் சிறப்பு அழைப்பாளராகவும், உள்ளூர் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டது தமிழக மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. சேகர்ரெட்டி மீண்டும் நியமிக்கப்பட்டது குறித்து திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேவஸ்தானம் போர்டுக்கு சேகர் ரெட்டி ஒரு கடிதம் அனுப்பினார். அதில், எனது வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியதாக தவறாக குறிப்பிட்டு, என்னை போர்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளீர்கள். வருமான வரித் துறைதான் ரெய்டு நடத்தியது. மேலும், அப்போது கிடைத்த பணம், நான் பங்குதாரராக உள்ள எஸ்.ஆர்.எஸ். சுரங்கக் கம்பெனியின் பணம். அதை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டது. என் மீது சிபிஐ 3 வழக்குகள் தொடுத்தன. அதில் 2 வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்து விட்டது.
இன்னொரு வழக்கில் இது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், என்னை நீங்கள் நீக்கியது தவறு. மீண்டும் தேவஸ்தானம் போர்டில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது விளக்கத்தை தேவஸ்தானம் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில்தான் அவர் சிறப்பு அழைப்பாளராக சேர்க்கப்பட்டார்.இவ்வாறு தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.
அதே சமயம், தமிழகத்தில் இருந்து ஒரு வி.வி.ஐ.பி, ஆந்திர முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு பிரஷர் கொடுத்ததால்தான், சேகர்ரெட்டி மீண்டும் சேர்க்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. போர்டு உறுப்பினர்கள் நியமனம் ஏற்கனவே முடிந்து விட்டதால், சிறப்பு அழைப்பாளராக சேகர்ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி சேர்க்கப்பட்டதன் மூலம் அவர் தமிழக அரசில் எந்த அளவுக்கு இப்போதும் செல்வாக்கு உள்ளார் என்பது தெளிவாகிறது.