சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை.. மறுபரிசீலனைக்கு முஸ்லீம்லீக் கோரிக்கை..

சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் அரசு உதவி பெறும் 1000க்கும் மேற்பட்ட சிறுபான்மை பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிறுபான்மை பள்ளிகள் என பெயர் இருந்தாலும், இந்த பள்ளிகள் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவ - மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க தடை விதித்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு காலியிடங்களை நிரப்ப அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏதும் ஏற்படகூடாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தகுதி என்பது எப்படி இருந்தது என்பது அனைவரும் அறிந்தது. அந்த வகையில் மாவட்ட அளவில் உபரியாக இருக்கும் ஆசிரியர்கள் நியமித்து கொள்ள பள்ளிகல்வி துறை அறிவுறுத்தியுள்ளது என்பது ஏற்புடையதல்ல. கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தரமான ஆசிரியர்களை நியமித்து கொள்ளும் முடிவில் பள்ளிகல்வித் துறை தலையிடுவது ஏற்புடையது அல்ல.

ஆகவே, சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசையும், அத்துறை அமைச்சர் செங்கோட்டையனையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.

More News >>