வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்.. மர்ம நபர் தப்பியோட்டம்..
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தெரிபவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்துள்னர்.
அமெரிக்காவில் பள்ளி, சர்ச், ஷாப்பிங் மால் என்று மக்கள் கூடும் இடங்களில் திடீரென எவனாவது சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் நடப்பதுண்டு. இதனால், அங்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளும் அடிக்கடி எழுப்பப்படும்.
வாஷிங்டன் நகரில் அந்நாட்டு நேரப்படி செப்.19ம் தேதி இரவு 10 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. வாஷிங்டன் நகரில் 14வது தெருவும், கொலம்பியா சாலையும் சந்திக்கும் இடத்தில்தான் சம்பவம் நடந்துள்ளது. கொலம்பியா ஹைட்ஸ் அருகில் உள்ளது இந்த இடம். அதாவது, அதிபரின் வெள்ளை மாளிகையில் இருந்து 3 மைல் தூரத்தில் இருக்கிறது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே ஒரு மர்ம நபர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். யார் சுட்டது, எதற்காக சுட்டார் என்பதே தெரியவில்லை. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, 4 ஆம்புலன்ஸ் மற்றும் பல போலீஸ் வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை ஜாய் கோர்ப் என்பவர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவு செய்தார். இதன்பின், இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. இதனால், பெரிய தாக்குதலாக இருக்குமோ என்று பலரும் அச்சப்பட்டனர்.
ஆனால், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், தப்பியோடிய மர்ம நபர் யார், எதற்காக சுட்டார் என்றும் புலனாய்வு செய்து வருவதாக போலீஸ் அதிகாரி ஸ்டூவர்ட் எமரான் தெரிவித்தார். நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி, அந்த நபர் பயன்படுத்தியது ஆட்டோ கன் என்றும், அதனால் சரமாரியாக குண்டுகள் வெளியேறியிருப்பதும் தெரிய வந்துள்ளது என்றார். மேலும், குண்டுசிதறல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.