ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி குறைப்பு.. காபி மீது வரி உயர்வு
ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காபி உள்ளிட்ட பானங்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது.
கோவா மாநிலம், பனாஜியில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின், நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது:
இந்த கூட்டத்தில் 20 பொருட்கள் மற்றும் 12 சேவைகள் மீதான வரிவிகிதம் மாற்றியமைக்கப்பட்டுளளது. சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஓட்டல் வாடகை மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படுகிறது. ரூ.7500க்கும் அதிகமான வாடகை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ரூ.1001 முதல் ரூ.7500 வரையான வாடகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்படும். ரூ.1000க்கு குறைவான வாடகை மீது வரி கிடையாது.
காபின் சேர்க்கப்பட்ட பானங்கள் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படும். ஜிப்கள் மீதான வரி 18ல் இருந்து 12 சதவீதமாகவும், கிரைண்டர் மீதனா வரி 12ல் இருந்து 5 சதவீதமாகவும், கப்பல் மற்றும் படகு எரிபொருள் மீதான வரி 18ல் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்படும். இதே போல், புளி, இலைகள், பாக்குமட்டைகள் போன்றவை மீதான வரி ரத்து செய்யப்படும்.
அதே போல், வைரம் பட்டை தீட்டும் பணி, கேட்டரிங் சேவை போன்றவற்றுக்கு வரி ரத்து செய்யப்படும்.
இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.