நாங்குனேரி, விக்கிரவாண்டியில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல்.. சுனில் அரோரா அறிவிப்பு..

நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர். சுனில் அரோரா கூறியதாவது:தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கும்,

புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ம் தேதி நடைபெறும். இந்த தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செப்.30ம் தேதி தொடங்கும். மனுக்களை திரும்ப பெற அக்.3ம் தேதி கடைசி நாளாகும். இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல் அக்.21ம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அவற்றின் வாக்கு எண்ணிக்கையும் அக்.24ம் தேதி நடைபெறும் என்றார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதே போல், கடந்த ஜூனில் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி திடீர் மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

More News >>