எடப்பாடி உதவி செய்யாவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது.. விஜய்க்கு அமைச்சர் பதிலடி..

மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உதவி செய்திருக்காவிட்டால் மெர்சல் படம் ரிலீஸ் ஆகியிருக்காது என்று விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசும் போது, மறைமுகமாக அதிமுக அரசை விளாசித் தள்ளினார். எதனை யாரால் முடிக்க முடியும் என்று பார்த்து, யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவர்களை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக நடக்கும் என்று மறைமுகமாக முதல்வர் இருக்கையில் அமர்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவர் அல்ல என்று சுட்டிக்காட்டினார். இதற்கு அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தன் படம் ஓட வேண்டும் என்பதற்காக சில நடிகர்கள் பரபரப்பாக பேசுகின்றனர். விஜய்யும் அப்படித்தான் பேசியிருக்கிறார். அவர் யார் பேச்சைக் கேட்டு அப்படி பேசினார் என்று தெரியவில்லை. 

அதே சமயம், அவரது பல படங்களை திரையிட முடியாமல் தவித்த போது, அவற்றை வெளியிட அதிமுக அரசு உதவி செய்தது. மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளார்கள். அதனால், விஜய் பேச்சை கேட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

மெர்சல் படத்தை வெளியிட முடியாமல் எங்களிடம் வந்தார். அப்போது நாங்கள் அவரை முதல்வரிடம் அழைத்துச் சென்று பேசியிருக்கா விட்டால், மெர்சல் படம் வெளியே வந்திருக்காது. இப்படி நாங்கள் வித்தியாசமோ, வேறுபாடோ பார்க்கவில்லை. அரசியல்வாதிகள் எல்லாம் அரைவேக்காடு என்றால் கமலஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார்? அவர் அரசியல்வாதிகளை குறை சொல்வதாக தெரியவில்லை. சட்டம், காவல்துறை, நீதிமன்றம் என்று எல்லாவற்றையும் குறை சொல்கிறார். அவர்தான் அரைவேக்காடு என்பதை ஒப்புக் கொள்கிறார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

More News >>