கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா?

சிபிஐ, அமலாக்கத் துறையின் போக்கால், ஜெயில் எல்லாம் நிரம்பி வழிகிறது என்று மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியிருக்கிறார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜகவினர் தீவிரம் காட்டிய போது, அதை முறியடிக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டவர் அமைச்சர் டி.கே.சிவக்குமார். ஆனால், அவருடைய முயற்சிகள் பலிக்காமல், பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது. ஆனாலும் டி.கே.சிவக்குமாரை பழி தீர்க்க, அவர் மீது மத்திய அரசு குறி வைத்து வந்தது. ஏற்கனவே குஜராத் ராஜ்யசபா தேர்தலின் போதே சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

  இதன் பின்னர், பல கோடி ரூபாய் சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டி, அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சிவக்குமாரின் 317 வங்கிக் கணக்குகள் வைத்திருப்பதாகவும், ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்திருப்பதாகவும் அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியது.

இந்நிலையில், சிவக்குமாரின் ஜாமீன் மனு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே.எம்.நடராஜன், பப்ளிக் பிராசிகியூட்டர்கள் அமித்மகாஜன், என்.கே.மட்டா, நிதஷே் ரானா ஆகியார் வாதாடினர். அவர்கள் வாதாடுகையில், சிவக்குமாரின் சகோதரர் 27 சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். அதில் 10 சொத்துக்களை அவரது தந்தை பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார். அதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்று அவரால் கணக்கு காட்ட முடியவில்லை. சிவக்குமார் தொடர்புடைய 317 வங்கிக் கணக்குகளை ஆராய வேண்டியுள்ளது. அவரது சட்டவிரோத பரிவர்த்தனைகளால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிவக்குமாருக்கு நிறைய தொடர்பு உள்ளது. அவரை வெளியில் விட்டால் தப்பியோடி விடுவார். மேலும், சாட்சியங்களை கலைத்து விடுவார். அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்றனர்.

சிவக்குமார் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, முகுல் ரோகத்கி வாதாடினர். சிங்வி வாதாடுகையில், சிவக்குமாரின் தந்தை தனது பரம்பரை சேமிப்பில் சொத்து வாங்கியிருக்கலாம். கணக்கு வைத்திருக்க தெரியாததால், அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார். சிவக்குமார் வீட்டில் ரெய்டு நடத்தி 40 லட்சம் எடுத்ததால்தான், நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்ததா? ப.சிதம்பரத்தை வெளியே விட்டால் தப்பியோடி விடுவார், சிவக்குமாரை வெளியே விட்டால் தப்பியோடி விடுவார் என்றெல்லாம் சிபிஐயும், அமலாக்கத் துறையும் கூறுகின்றன. சிதம்பரம் 40 ஆண்டு கால வழக்கறிஞர். மூத்த அரசியல் தலைவர். அவர் ஓடி விடுவாரா? சிவக்குமாரும் அப்படித்தான். இந்த விசாரணை ஏஜென்சிகளின் சமீபத்திய போக்குகளால் ஜெயில்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. சிவக்குமார் வீட்டில் ஐ.டி. ரெய்டு பண்ணி, ஆவணங்களை கைப்பற்றி விட்டார்கள். இதற்கு மேல் இந்த வழக்கில் என்ன தேவை? அவரை ஜாமீனில் விட வேண்டும் என்றார்.

மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குஹா தனது தீர்ப்பை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More News >>