நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு யாருக்கு?
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது.
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அ.ம.மு.க, கமலின் மக்கள் நீதிமய்யம் எல்லாம் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டன. அதனால, இப்போது விக்கிரவாண்டியில் அதிமுகவும், திமுகவும், நாங்குனேரியில் அதிமுகவும், காங்கிரசும் நேருக்கு நேர் மோதப் போகின்றன.
இந்த தேர்தலில் நடிகர் விஜய்யோட ரசிகர்கள் யாருக்கு ஆதரவு என்பது பரபரப்பான விவாதமாகி இருக்கிறது. இதற்கு காரணம், விஜய் சமீபத்தில் பேசிய பேச்சுதான். பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னையில் நடந்தது. அதில், நடிகர் விஜய் பேசும் போது மறைமுகமாக அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில், பேனர் அச்சடித்தவரையும், லாரி டிரைவரையும் அரெஸ்ட் பண்ணுறீங்க.. ஆனால், பேனர் வைத்தவரை பிடிக்க மாட்டேங்கிறீங்க.. எதனை யாரால் செய்து முடிக்க முடியும் என்பதை பார்த்து, யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அங்க உட்கார வைத்தால் எல்லாம் சரியாகி விடும்.. என்று மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடியை நேரடியாக விஜய் விமர்சித்தார்.
அதுமட்டுமல்ல, என் மீது நடவடிக்கை எடுங்க.. என் ரசிகர்களை ஒண்ணும் பண்ணாதீங்க... என்று கோபப்படவும் செய்தார்.
அதற்கு ஒரு காரணம் உண்டு. அதிமுக பேனர் வைப்பதற்கு பின்னணியில் இருந்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இது வரைக்கும் போலீஸ் கைது செய்யவில்லை. அதேசமயம், மதுரையில் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் தங்கபாண்டியன் பிறந்த நாளுக்காக பேனர் வைத்த விஜய் மன்றப் பொருளாளர் ஜெயகார்த்திக்கை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். இன்னொரு நிர்வாகி சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதனால்தான், விஜய் அப்படி கோபமாக பேசினார்.
விஜய் பேச்சுக்கு அதிமுக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி என்று பலரும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். விஜய்யின் மெர்சல் படத்துக்கு பிரச்னை வந்த போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உதவி பண்ணியிருக்காவிட்டால், மெர்சல் படமே அப்ப வெளியே வந்திருக்காது என்று கடம்பூர் ராஜு கோபமாக சொன்னார். இந்த சூழ்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு அதிமுக மீது தான் கோபம் ஏற்பட்டிருக்கிறது. அதனால, நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கு எதிராகத்தான் விஜய் ரசிகர்கள் இருப்பார்கள். இருந்தாலும், திமுகவுக்கு விஜய் நேரடியாக ஆதரவு தெரிவிப்பாரா என்பது தெரியவில்லை. இது பற்றி விஜய்யோ, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ இது வரை எந்த கருத்தும் சொல்லவில்லை.
வழக்கமாக, விஜய் வாய் திறக்காவிட்டாலும் அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஏதாவது சொல்வார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்த போது, எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவர், பத்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை அரசியலுக்கு கொண்டு வர விரும்பினேன். நடிகர் என்பதால் அரசியலில் புகழ் பெற முடியும். அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது தமிழகத்தில் எப்படிப்பட்ட அரசியல் உள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. விஜய் அரசியலுக்கு வரமாட்டார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளிக்காது என்று கூறியிருந்தார்.
அதே போல், நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு கருத்தை எஸ்.ஏ.சி. சொன்னார். அதாவது, நெல்லையில் ஒரு விழாவில் அவர் பேசும் போது, விஜய் ஆதரவு யாருக்கு என்பதை அவர்தான் அறிவிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, தமிழக மக்கள் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் என்று பிஜேபிக்கு எதிரான கருத்தையும் வெளிப்படுத்தினார்.
அதனால், நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் எஸ்.ஏ.சந்திரசேகர், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ திமுகவை ஆதரிச்சு பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், அதற்காக காத்திருப்பார்களா அல்லது தங்கள் விருப்பப்படி அதிமுகவுக்கோ, திமுகவுக்கோ போய் தேர்தல் வேலை செய்வார்களா என்பது தெரியவில்லை.