திகார் சிறையில் சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு..
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசினர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த 5ம் தேதி கைது செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று(செப்.23) காலையில் திகார் சிறைக்கு சென்றனர். அங்கு அவர்கள், ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். அவர்களுடன் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் சென்றிருந்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பிறகு சோனியாவும், மன்மோகனும் புறப்பட்டு சென்றனர்.
பின்னர், கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், எனது தந்தைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உறுதியான ஆதரவை தெரிவித்திருக்கிறார். மன்மோகன் சிங், எனது தந்தையுடன் நாட்டின் பொருளாதார நிலை குறித்து நிறைய விவாதித்தார் என்று தெரிவித்தார்.
சோனியா, மன்மோகன் சந்திப்பு குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், எனது குடும்பத்தினர் மூலமாக இதை பதிவிடுகிறேன். சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும் என்னை சந்தித்து, என்னை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி எவ்வளவு காலம் துணிவுடனும், உறுதியாகவும் இருக்கிறதோ, அவ்வளவு காலம் நானும் துணிவுடனும், உறுதியாகவும் இருப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.