எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
பிரிட்டீஷ் மாடலாக இருந்து சினிமா நாயகியாக உருமாறிய எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
முதலில் மாடலிங்கில் தனது பயணத்தை ஆரம்பித்த எமி ஜாக்சன் பின் படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் முதலில் நடித்த படம் மதராசப்பட்டினம், இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருப்பார். இந்த படத்தில் ஆங்கிலேயர் கதாப்பாத்திரத்தில் நடித்த எமிக்கு தமிழ் வசனம் அவ்வளவாக கிடையாது, ஆனாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
அந்த படத்திற்கு பிறகு தாண்டவம், கெத்து, தங்கமகன், தெறி போன்ற படங்களில் நடித்தார், பிறகு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஐ, 2.0 ஆகிய படங்களில் நடித்தார். அதற்கு பின் தமிழ் படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை.
மேலும் எமி தனது நீண்ட நாள் நண்பரான ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். 2020ல் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறார் எமி. இந்நிலையில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாக இருந்த எமி, தன் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எமி, தன் குழந்தை கணவர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும், தன் குழந்தைக்கு ஆன்ட்ரியாஸ் என பெயரிட்டுள்ளார். தற்போது குழந்தை பிறந்திருக்கும் நிலையில் மீண்டும் அவர் தமிழ் படங்களில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.