பிகில் படக்குழு நினைச்ச மாதிரியே ஃப்ரீ புரமோஷன் ஸ்டார்ட்!
பிகில் இசை வெளியீட்டு விழா நடத்த எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள் என தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜி.எஸ்.டிக்கு எதிராக விஜய் பேசிய வசனங்களை எதிர்ப்பதாக நினைத்து மெர்சல் படத்திற்கு பா.ஜ.க.,வினர் மிகப்பெரிய இலவச விளம்பரத்தை செய்தனர்.
இந்நிலையில், தற்போது பிகில் படத்திற்கான விளம்பரமும் படக்குழு எதிர்பார்த்தது போன்று இப்போதே ஆரம்பித்து விட்டது.
பிகில் இசை வெளியீட்டில் விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசிய கருத்துக்கள், உடனடி ரியாக்ஷனாக இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை சன் டிவியில் என்ன தான் எடிட் செய்து ஒளிபரப்பு செய்தாலும், விஜய்யின் ஆட்டியூட் மற்றும் மேனரிசம் அவர்களை நிச்சயமாக சற்று ஆட்டம் காண வைத்துள்ளது.
பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் கறி வெட்டும் கட்டையின் மீது கால் வைத்துள்ளார் என கறி கடை உரிமையாளர்கள் நேற்று கோவையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பிறகு அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தை துவங்கினர்.
ஆனால், அது படக்குழுவை பெரிதும் பாதிக்காத நிலையில், தற்போது, பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது என தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு அரசின் சார்பில் உயர் கல்வித்துறை அதிரடியாக நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
பிகில் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. ஆகவே, தணிக்கை சான்றிதழ் வழங்குதல் மற்றும் படத்தின் ரிலீசுக்கு தடை விதித்தல் போன்ற நேரடி தாக்குதலில் அரசு ஈடுபட்டால், அது மேலும், அந்த படத்திற்காக நெகட்டிவ் பப்ளிசிட்டியை உண்டு பண்ணும் என்பதே சினிமா வர்த்தகர்களின் கருத்தாக உள்ளது.