டப்பிங் படங்கள் வருகையால் அசுரன் வசூல் பாதிக்கப்படுமா?

அக்டோபர் 2ம் தேதி டப்பிங் படங்களான சைரா மற்றும் வார் தமிழகத்தில் வெளியாவதால் அசுரன் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரன். வடசென்னைக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த வெற்றிக் கூட்டணி தமிழகத்தில் அசுரத்தனமான வெற்றியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி ரிலீசாவதால், அதற்கு முன்னாள் அக்டோபர் 2ம் தேதி தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் பாலிவுட்டில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருக்கும் வார் திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவதால், அசுரனின் வசூல் பெருமளவில் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா , தமன்னா நடிப்பில், அடுத்த பாகுபலியாக சைரா உருவாகியுள்ளது. மேலும், ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடிப்பில் வார் படம் உருவாகியுள்ளது. இந்த இரண்டு படங்களின் டிரைலர்களும் தமிழ் டப்பிங்கிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அசுரனின் வசூல் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மேலும், அசுரன் படத்திற்கு இசையமைத்துள்ள ஜி.வி. பிரகாஷ், நடிப்பில் உருவாகியுள்ள 100% காதல் படமும் அக்டோபர் 4ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More News >>