பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்... 8 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பாகிஸ்தானில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் எதிரொலித்துள்ளன.
பாகிஸ்தானில் இன்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், பாகிஸ்தான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 8 பேர் இந்த நிலநடுக்கத்திற்கு பலியாகி உள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அதில் சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலை மிகவும் மோசமாகவும் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 5.8 ஆக ரிக்டர் அளவு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளது.
இந்திய – பாகிஸ்தான் எல்லையை ஒட்டி சுமார் 40 கி.மீ., ஆழத்துக்கு இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லி மற்றும் சில வடமாநில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான நில அதிர்வுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கி உள்ளன.
நிலநடுக்கத்தை உணர்ந்த டெல்லி மக்கள் வீடுகள் மற்றும் அலுவலங்களை விட்டு சாலையில் கூடினர். இந்தியாவில் நில நடுக்கத்தின் தாக்கம் பெரிதாக இல்லை என்பதால், பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.