பிகில் ஆடியோ வெளியீட்டில் சிவாஜி சாரை அவமதிக்கலை – நடிகர் விவேக் ட்வீட்!
பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜி குறித்து விமர்சிக்கும் தொனியில் தான் பேசவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளட்டும் என நடிகர் விவேக் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவாஜியின் சினிமா பாடல் குறித்து பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் விமர்சித்ததாகக் கூறி, அவருக்கு எதிராக கண்டன குரல்களை சிவாஜியின் ரசிகர்கள் கிளப்பினர்.
இந்நிலையில், அந்த நிகழ்வுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், “1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நடிகர் சிவாஜியின் பாடலை தான் தவறாகவோ அல்லது விமர்சனம் செய்யும் ரீதியிலோ பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசவில்லை என்று சிவாஜி ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ட்வீட்டை நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.
அவரது, இந்த ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது உங்களுக்கான எதிர்ப்பு அல்ல என்றும், நடிகர் விஜய்க்கு எதிரான எதிர்ப்பு அலையின் ஒரு ரூபம் என்றும் ரசிகர்கள் பதில் கமெண்டுகள் போட்டு வருகின்றனர்.