விக்கிரவாண்டி, நாங்குனேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளில் அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. நாங்குநேரியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ்பாண்டியன், பிரபாகரன், நெல்லை புறநகர் மாவட்ட பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், செயலாளர் நடராஜன், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கேபிரியேல் ஜெபராஜன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், இட்ட மொழி ஊராட்சி முன்னாள் தலைவர் டென்சிங், ஆர்.எஸ்.முருகன், பாப்புலர் முத்தையா, ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் விருப்பமனு அளித்தனர்.

விக்கிரவாண்டியில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு முத்தமிழ்செல்வன், சிந்தாமணி வேலு, பேட்டை முருகன், கண்டமங்கலம் ராமதாஸ், பொதுக்குழு உறுப்பினர் பன்னீர் உள்ளிட்டோர் விருப்பமனு அளித்தனர்.

 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

விக்கிரவாண்டியில் காணை ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன், நாங்குனேரியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருக்கும் போது, ஒன்றியச் செயலாளர் அல்லது கிளைச் செயலாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பார். அதே அடிப்படையில் தற்போதும் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News >>