ஹவ்டி விவசாயி.. மோடி கேட்பாரா? காங்கிரஸ் கேள்வி..
அமெரிக்காவில் ஹவ்டி மோடி கொண்டாடிய பிரதமர் மோடி, ஹவ்டி விவசாயி, ஹவ்டி யூத்? என அவர்களிடம் விசாரி்ப்பாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் ஹவ்டி மோடி(நலமா மோடி) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கும் போது, பல ஆயிரம் கோடி செலவில் அமெரிக்காவுக்கு போய் இப்படியொரு வரவேற்பு நிகழ்ச்சி தேவைதானா என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வி எழுப்பின. ஹவ்டி மோடி நிகழ்ச்சியை கிண்டலடித்தன.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவில் ஹவ்டி மோடி என்ற கேள்விக்கு இந்தியாவில் எல்லாம் நலம் என்று பிரதமர் பதிலளித்திருக்கிறார். ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் துன்பப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். விவசாயிகளை பார்த்து ஹவ்டி விவசாயி என்று பிரதமர் மோடி கேட்பாரா? இளைஞர்களிடம் ஹவ்டி யூத் என்று விசாரிப்பாரா?
சஅரேபிய எண்ணெய் கிணறுகளில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ.20ம், டீசலுக்கு ரூ.15.83ம் வரி விதிக்கிறது. (பெட்ரோல் விலை ரூ.77.06, டீசல் விலை ரூ.70.91). காங்கிரஸ் காலத்தில் வீரப்ப மொய்லி பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது, இது போன்ற பிரச்னைகளை(சவுதி தாக்குதலால் தட்டுப்பாடு) சமாளிக்க 5 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு வைத்திருந்தார். இப்போதுள்ள மோடி அரசு பிரச்னைகளை திசைதிருப்பவே முயற்சிக்கிறது.
இவ்வாறு ஷர்மிஸ்தா முகர்ஜி கூறினார்.