பஞ்சாப்பில் வெடிகுண்டுகளை வீசியது சீன ட்ரோன்கள்.. பாகிஸ்தானுக்கு ஆதரவா?

பாகிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் மூலம் 80 கிலோ வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்து நமது பஞ்சாப் எல்லைக்குள் வீசியிருந்தனர். தற்போது, இந்த ட்ரோன்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குள் 2 கி.மீ. தூரத்தில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வெடிமருந்து மற்றும் ஆயுதங்களை ட்ரோன்கள் மூலம் கொண்டு வந்து கொட்டியிருந்தனர். பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் தீவிரவாதிகளுக்காக அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உதவியுடன் தீவிரவாதக் குழுக்கள் கொண்டு வந்துள்ளன என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மொத்தம் 8 ட்ரோன்களில் சுமார் 80 கிலோ வெடிபொருட்கள் மற்றும் நவீனரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவை ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்திற்குள் தீவிரவாத செயல்களை நடத்துவதற்காக திட்டமிட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அமிதர்சரஸ், டான்டெரான் பகுதிகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பாக, சுப்தீப்(22) உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தீவிரவாத செயல்களுக்கு மூளையாக விளங்கிய மான்சிங், ஆகாஷ்சிங் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து வெடிமருந்து, ஆயுதங்களை கொண்டு வந்த ட்ரோன்கள் வெறும் 2 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து வந்துள்ளன. ஆனாலும், இந்திய ராணுவ ரேடார்கள் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அந்த ட்ரோன்களை ஆய்வு செய்த போது, அவை சீனரக ட்ரோன்களாக இருந்தன.

மேலும், அந்த வெடி பொருட்களை இறக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கயிறு, சீனாவில் மலையேறுவதற்கு பயன்படுத்தப்படுபவை என்று தெரிய வந்துள்ளது. எனவே, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எப்படி இவை கிடைத்தன. பாகிஸ்தானுடைய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு சீன ஆதரவு உள்ளதா என்று இந்திய உளவு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

More News >>