முதல்வர் எடப்பாடி திருவனந்தபுரம் பயணம் ... நதிநீர் பங்கீடு குறித்து கேரள முதல்வருடன் பேச்சு

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் முக்கிய பேச்சு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரம் சென்றார். இன்று மாலை இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

தமிழகம் மற்றும் கேரளா இடையே முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2017-ல் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இன்று 2-வது முறையாக சந்திப்பு நடைபெறவுள்ளது. இதற்காக இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார்அவருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் சென்றுள்ளனர்.

இன்று மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சு நடத்துகின்றனர்.இந்த பேச்சுவார்த்தையில் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்பு திட்டம் குறித்தும் இந்த சந்திப்பின்போது விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது, முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து திருவனந்தபுரம் புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகம்-கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து பேசவே திருவனந்தபுரம் செல்வதாக குறிப்பிட்டார். இன்றைய பேச்சுவார்த்தையால் தமிழகம் - கேரளா இடையிலான நல்லுறவு மேலும் மேம்படும் என்றும், தமிழகத்திற்கு உரிய நதிநீரை பெற இந்த பேச்சுவார்த்தை உதவும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இடையிலான இன்றைய சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.

More News >>