விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்து... 2 பைலட்டுகள் உயிர் தப்பினர்
குவாலியர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் பத்திரமாக குதித்து உயிர் தப்பினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் இந்திய விமானப் படையின் தளம் உள்ளது. இன்று காலை விமானப் படையின் மிக் 21 ரக போர் விமானத்தில், குரூப் கேப்டன் மற்றும் ஸ்குவாட்ரன் லீடர் அந்தஸ்தில் உள்ள பைலட்டுகள் இருவர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விமானம் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கீழே பாய்ந்து விழுந்து நொறுங்கியது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்து விழுவதைக் கண்டவுடன் பைலட்டுகள் இருவரும் பாராசூட்டில் குதித்து பத்திரமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் கீழே விழுந்து நொறுங்கிய இடத்தில் விமானப் படை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் உள்ள பழமையான மிக் 21 ரக விமானங்கள், சமீப காலமாக அடிக்கடி விபத்துக்குள்ளாவது குறிப்பிடத்தக்கது.