மோடி தமிழ் மொழியை புகழ்ந்தது சரி மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன? - ஸ்டாலின் விளக்கம்

சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை வரவேற்கிறேன். உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்படும் தயக்கத்தையும், பயத்தையும் போக்க மாணவர்களுடன் ஆலோசனை என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

அப்போது மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த மோடி, “தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அது சமஸ்கிருதத்தை காட்டிலும் மிகவும் பழமையானது. தமிழ் அழகான மொழி. அப்படிப்பட்ட மொழியை என்னால் பேச முடியாதது குறித்து வருத்தமளிக்கிறது. வணக்கம் என்று சொல்ல மட்டும் எனக்கு தெரியும்.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், "சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது" என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை வரவேற்கிறேன். தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>