தமிழ்நாடு, கேரளா இடையே நதிநீர் பிரச்னையை தீர்க்க 10 பேர் குழு..

 

தமிழ்நாடு, கேரளா இடையே நதிநீர் பிரச்னைகளைத் தீர்க்க

10 பேர் குழு அமைக்க இருமாநில முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான  நதிநீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு சென்றார். அங்கு தனியார் ஓட்டலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தமிழக அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கேரளதரப்பில் பினராயி விஜயனுடன் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

  பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியும், பினராயி விஜயனும் கூட்டாக பேட்டி அளித்தனர். பினராயி விஜயன் கூறுகையில், இருமாநில மக்களும் எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் சகோதரர்களாக பழகி வருகின்றனர். இரு மாநிலங்களுக்கும் இடையேயான நதிநீர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இரு மாநிலங்களிலும் தலா  5 பேர் என 10 பேர் கொண்ட குழு, ஒரு வாரத்துக்குள் அமைக்கப்படும். முல்லை பெரியாறு மின்திட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “தமிழ்நாடும், கேரளமும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நதி நீர் பங்கீடு தொடர்பாக இப்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் எப்படி நீர் பங்கீடு செய்துகொள்வது என்பதற்காக இரண்டு மாநிலத்திலும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழு ஆய்வு செய்து, அந்த ஆய்வின் அடிப்படையில் அந்த திட்டம் நிறைவேற்றப்படும். பாண்டியாறு புன்னம்புழா அந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டு அதில் உள்ள பிரச்னைகள் ஆய்வு செய்து அவை நிறைவேற்றப்படும். முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து உரிய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும். முதல் கட்டமாக இந்த பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறோம் என்றார்.

More News >>