நம்ம வீட்டு பிள்ளைக்கு தியேட்டர் இல்லையா?
காப்பான் படம் மக்களின் ஏகோபித்த வரவேற்பால் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், இந்த வாரம் ரிலீசாகும் எந்த படத்திற்கும் திரையரங்கம் ஒதுக்கப்படாது என சில தியேட்டர்கள் தெரிவித்துள்ளன.
லைகா நிறுவன தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன் லால், சமுத்திரகனி, சாயிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் காப்பான்.
சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம் மற்றும் என்.ஜி.கே படங்களின் தொடர் தோல்வியை காப்பான் படம் முறியடிக்கும் என சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஆர்வத்துடன் எதிர் நோக்கினர்.
ஆனால், படம் வெளியான உடனே, விமர்சகர்கள் பலர் காப்பான் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை சரமாரியாக வைத்தனர்.
ஆனால், திரையரங்கில் விமர்சனத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் வார நாட்களிலும் படை எடுத்து வருகின்றன.
இதனால், சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும், தியேட்டரில் பத்து பேர் கூட வராததால், பல தியேட்டர்களில் காப்பான் படத்திற்கு கூடுதல் காட்சிகளை ஒதுக்கியுள்ளனர்.
இந்நிலையில், வித்யா திரையரங்கம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காப்பான் படத்திற்கு மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த வாரம் வெளியாகும் எந்த படத்திற்கும் தியேட்டர் ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டது.
இந்த வாரம் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு தியேட்டர் ஒதுக்க முடியாது என்பதை தான் மறைமுகமாக தியேட்டர் ஓனர்கள் கூற தொடங்கியுள்ளனர்.
மேலும், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த சீமராஜா, மிஸ்டர் லோக்கல் திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பெரிய அளவில் விளம்பரங்களை செய்யவும் படக்குழு முன் வராதது குறிப்பிடத்தகக்து.