தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்வு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மகளான ரூபாவே இந்த சங்கத்தின் முதல் பெண் தலைவர்.

உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு நியமித்த லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அதன்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்கங்களிலும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடக் கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால், அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும். கிரிக்கெட் அமைப்புகளில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக் கூடாது என்பது அவற்றில் முக்கியமான சீர்திருத்தங்கள் ஆகும்.

இந்நிலையில் , இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அக்டோபர் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மாநில கிரிக்கெட் சங்கங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று நடந்தது.

இக்கூட்டத்தில், சங்கத் தலைவராக ரூபா குருநாத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரைத் தவிர வேறு யாருமே தலைவர் பதவிக்கு வேட்புமனுவே தாக்கல் செய்யவில்லை. ரூபா குருநாத், சங்கத்தின் முன்னாள் தலைவரான இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மகள் ஆவார். ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். சங்கத்திின் துணை தலைவர்களாக டி.ஜெ.சீனிவாச ராஜ், டாக்டர் அசோக் சிகாமணி, செயலாளராக ராமசாமி, இணைச் செயலாளராக கே.ஏ.சங்கர், உதவிச் செயலாளராக வெங்கட்ராமன், பொருளாளராக பார்த்தசாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக சீனிவாசன் நீண்ட காலமாக பதவி வகித்தார். அவர் 70 வயதை கடந்து விட்டதால் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக அவரது மகள் ரூபா போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

More News >>