கர்நாடகா இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த போதும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவருக்கு தொடர்ந்து நெருக்கடி தரப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்தது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேர், ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 2 பேர் மற்றும் சுயேச்சைகள் என்று 17 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதை ஏற்காத அப்போதைய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ், அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்தார். மேலும், தற்போதுள்ள சட்டசபையின் பதவிக்காலம் முடியும் வரை அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதன்பின், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை எதுவும் இல்லாததால், 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்.21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதே சமயம், ஐகோர்ட்டில் உள்ள ஒரு வழக்கில் உள்ள தடை காரணமாக 2 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை.

இதையடுத்து, இடைத்தேர்தல்களை நிறுத்த உத்தரவிடக் கோரி 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய சபாநாயகர் வி.எச்.காகேரி சார்பில், சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சொந்த காரணத்தால், பதவியை ராஜினாமா செய்வதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை உண்டு. அதை சபாநாயகர் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏ.க்கள் 17 பேரை தகுதிநீக்கம் செய்த பழைய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் சார்பில் சீனியர் வக்கீல் கபில்சிபல் ஆஜரானார். அவர் வாதாடும் போது, சபாநாயகரின் அதிகாரத்தை யாரும் வரையறை செய்யக் கூடாது. ராஜினாமா கடிதத்தை அப்படியே ஏற்பது அவரது வேலை அல்ல. எல்லா விஷயங்களையும் கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்துதான் அவர் முடிவெடுப்பார். அதை யாரும் தடுக்க முடியாது. 17 பேரும் ராஜினாமா கடிதம் கொடுத்ததுமே, மொத்தமாக மும்பைக்கு சென்று ஸ்டார் ஓட்டலில் தங்கினர். அவர்களை அழைத்து சென்றது பாஜக மூத்த தலைவர்களுக்கு நெருக்கமான ராஜீவ் சந்திரசேகரின் ஜெட் விமானம். அந்த ஓட்டலில் தங்கியிருக்கும் போது அவர்கள் கூட்டாகவே பேட்டியும் கொடுத்தனர். பிறகு எப்படி சொந்த காரணம் இருக்க முடியும்? சபாநாயகர் செய்தது சரிதான். அவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கு முடியும் வரை இடைத்தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான ராகேஷ் திவேதி, தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட ஆணையத்திற்கு அதை நிறுத்தி வைக்கவும் அதிகாரம் உள்ளது. எனவே, 15 தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்.22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

More News >>