சந்திரயான் லேண்டர் எங்கே இறங்கியது? நாசா வெளியிட்ட படங்கள்..
நிலவில் சந்திரயான் இறங்க வேண்டிய இடத்தில் நாசாவின் கேமரா எடுத்துள்ள படங்களை நாசா வெளியிட்டிருக்கிறது.
நிலவின் தெற்கு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), விண்ணுக்கு அனுப்பியது. புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, கடந்த மாதம் 2ம் தேதியன்று நிலவின் வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது.
அதன்பின், நிலவில் இறங்கி ஆய்வு மேற்ெகாள்ளவிருக்கும் லேண்டர் விக்ரம், சந்திரயானில் இருந்து பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்றுவட்டப் பாதைக்கு லேண்டர் விக்ரம் சென்றது. கடைசியாக, செப்.7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக விக்ரம் லேண்டரை நிலவில் இறக்குவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், நிலவில் இருந்து 2.1 கி.மீ. தூரத்தில் லேண்டர் சுற்றிக் கொண்டிருந்த வரை இஸ்ரோ கட்டுப்பாட்டறையுடன் தொடர்பில் இருந்தது. அதன்பின், லேண்டர் நிலவில் இறங்கும் போது அதன் தொடர்பு துண்டித்து போய் விட்டது. இதனால், லேண்டரிடம் இருந்து எந்தவித தகவலையும் பெற முடியாமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் தவித்தனர்.
இதன்பின்பு, சந்திரயான் ஆர்பிட்டரில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சிக்கப்பட்டது. இதில், நிலவில் மெதுவாக தரையிறங்க வேண்டிய லேண்டர் வேகமாக தரையிறங்கியதால், நிலவின் மேற்பரப்பில் மோதியிருக்கிறது என்பதும், அதனால்தான் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டது என்றும் தெரிய வந்தது.இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவின் உதவி கோரப்பட்டது. நாசா ஏற்கனவே எல்ஆர்ஓ என்ற ஆர்பிட்டரை நிலவை சுற்றி வரச் செய்திருக்கிறது. அந்த ஆர்பிட்டரின் கேமராக்கள், நமது விக்ரம் லேண்டர் இறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இடத்திற்கு நேராக செல்லும் போது படங்களை எடுத்து அனுப்பின. ஆனாலும், அதில் லேண்டரின் இருப்பிடம் தெரியவில்லை என்று நாசா கூறியிருந்தது.
தற்போது நாசாவின் எல்ஆர்ஓ ஆர்பிட்டரின் கேமராக்கள் எடுத்த படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அந்த படங்களில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், தூசி அதிகமாக இருந்ததாலும் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. அக்டோபரில் மீண்டும் அந்த பகுதியை ஆர்பிட்டர் கடக்கும் போது, நல்ல வெளிச்சத்தில் படங்களை எடுத்து அனுப்பினால், அப்போது விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.