சுபஸ்ரீ மரண வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் சிக்கினார்..

அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ கொலையான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

சென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண விழாவிற்கு வரவிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ரேடியல் சாலையில் வரிசையாக பேனர்களை வைத்திருந்தனர். சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று சரிந்து விழுந்து, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியில் அவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்த சம்பவம் தொடர்பாக அனுமதியின்றி பேனர் வைத்த ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவரிடம் விசாரணை நடத்தவோ, கைது செய்யவோ இல்லை. இதையடுத்து, சட்டவிரோதமாக பேனர் வைத்த  ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இத்தனை நாளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

 

 இதனிடையே, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தண்ணீர் லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்து, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 279, 336, 304(ஏ)  ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம், ஜெயகோபாலை கைது செய்யவில்லை. அவரும் போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்தார். அவரது வீட்டில் சம்மனை ஒட்டிய போலீசார், அவரை பிடிக்க 5 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி அருகே தேன்கனிக்கோட்டையில் ஜெயகோபாலை போலீசார் இன்று (செப்.27) கைது செய்தனர்.

More News >>