நாங்குனேரி சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..

 

நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதே போல், கடந்த ஜூனில் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி திடீர் மரணம் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளிலும் அக்.21 ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளராக புகழேந்தி நிறுத்தப்பட்டுள்ளார். நாங்குனேரி தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்பதால், அக்கட்சிக்கு விட்டு தரப்பட்டது.

 நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று பேச்சு அடிபட்டது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று வெளியிட்ட அறிவிப்பில், நாங்குனேரியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபி மனோகரன், நாகர்கோவில் அருகே உள்ள மார்த்தாண்டம் மாராநாடு பகுதியைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் சென்னை தாம்பரத்தில் வசிக்கிறார். மேலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவராக அவர் இருந்து வருகிறார். சொந்த தொழில் செய்து அவர், எம்பிஏ படித்தவர். ஏற்கனவே இந்திய விமானப்படையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர். 

More News >>