மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா உடன்பாடு. முரண்டுபிடித்த சிவசேனா பணிந்தது?

மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியாகிறது. பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என உடன்பாடு எட்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. சிவசேனா கட்சி தாங்களே அதிக தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும், முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டோம் என்றும் அப்போது கூறியது.

இதனால், இருகட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன. அப்போது மோடி அலையால் பாஜக 122 தொகுதிகளிலும், சிவசேனா 63 தொகுதிகளிலும் வென்றன. இதையடுத்து, பட்நாவிஸ் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. அதில் சிவசேனாவும் பங்கேற்றது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இரு கட்சிகளுக்கும் தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு, கடைசியில் சிவசேனா பணிந்தது.

இப்போதும், மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 144 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்று சிவசேனா முரண்டு பிடித்தது. ஆனால், பாஜக தாங்களே அதிக இடங்களில் போட்டியிடுவோம் என்றும் சிவசேனாவுக்கு நூறுக்கு கீழேதான் தரப்படும் என்றும் கூறியது. இதனால், கொதிப்படைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 288 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினரிடம் மனு வாங்கினார். பால்தாக்கரே விருப்பப்படி, சிவசேனாவை சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக வர வேண்டும், அதற்காக நாங்கள் தனியாக போட்டியிடவும் தயார் என்று ஆவேசமாக கூறினார்.

இதன்பின் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக தலைவர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி கடைசியாக ஒரு பார்முலா தயாரித்தனர். இதன்படி, பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 122 தொகுதிகளிலும், மீதி 18 தொகுதிகளில் இதரக் கட்சிகளும் போட்டியிடும். சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்று கூறப்பட்டு வந்தது. முரண்டு பிடித்து வந்த சிவசேனாவும் கடைசியில் இதற்கு ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்துள்ள பிரதமர் மோடியிடம் இந்த உடன்பாடு குறித்து தெரிவித்த பின், அது உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால், இன்று மாலையில் மும்பையில் முதல்வர் பட்நாவிஸ், உத்தவ்தாக்கரே ஆகியோர் இணைந்து கூட்டணி உடன்பாட்டை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

More News >>