விக்கிரவாண்டி, நாங்குனேரியில் வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது.. முக்கிய வேட்பாளர்கள் மனுதாக்கல்..

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே நெல்லை மாவட்டம், நாங்குனேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். எனவே, எம்.பி.யானதும் தனது எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி. கடந்த ஜூனில் திடீர் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.

 இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 23ம்  தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். நாங்குநேரி தொகுதியில் 9 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனும், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை நடக்கிறது. மனுக்கள் வாபஸ் பெற 3ம் தேதி கடைசி நாள். அன்று பிற்பகலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

More News >>