அமெரிக்க ஊடகங்களில் தமிழ் மொழி விவாதம்.. பிரதமர் மோடி தகவல்..

அமெரிக்காவில் நான் பேசும் போது, உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றேன். இப்போது அமெரிக்க ஊடகங்களில் இது பற்றித்தான் விவாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் என்ற தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த 2 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு சென்னை வந்திறங்கினார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பாஜகவினர் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததற்கு பிறகு முதல் முறையாக சென்னை வந்திருக்கிறேன். சென்னை மக்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு நீங்கள் அளித்துள்ள சிறப்பான வரவேற்புக்கு நன்றி.

அமெரிக்காவில் நான் தமிழில் பேசினால் மிகுந்த ஆரவாரம் செய்தனர். உலகிலேயே மிக தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசினேன். இதனால், அங்குள்ள ஊடகங்களில் இப்போது அதுதான் விவாதிக்கப்படுகிறது. இந்தியாவின் மீது உலகில் உள்ள அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதை அமெரிக்க பயணத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

நாம் அனைவரும் நமது நாட்டின் நலனுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். முதலாவதாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் மாபெரும் பாதயாத்திரைகள் நடத்தி அதன் மூலம் இந்த விஷயத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

பின்னர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு பிரதமர் புறப்பட்டு சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அங்கிருந்து அவர் விழா நடைபெறும் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்திற்கு சென்று விழாவில் பங்கேற்றார்.

More News >>