பாஜகவுக்கு தலைவர் இல்லை.. எடப்பாடி அளித்த விளக்கம்..

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும். இதை அந்த கட்சி தலைவர்களே தெரிவித்துள்ளார்கள். அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று பலர் பேசியிருக்கிறார்கள். இப்போது பா.ஜ.க. மாநில தலைவராக யாரும் இல்லை. அதனால்தான், அவர்களை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை. இது இடைத்தேர்தல்தான். இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று எல்லா கூட்டணி கட்சிகளுக்கும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், இடைத்தேர்தலில் அதிமுக எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. ஏன் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், உங்கள் கட்சியில் தலைவர் இல்லை என்று நாசூக்காக கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

அதே சமயம், அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று இடைத்தேர்தலில் ஆதரவு கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>