பலாத்கார குற்றவாளியை காப்பாற்ற துடிக்கும் பாஜக.. பிரியங்கா காந்தி விமர்சனம்
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் சுக்தேவானந்த் சட்டக் கல்லூரி உள்ளது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த சுவாமி சின்மயானந்த், இந்த கல்லூரி சேர்மனாக உள்ளார். இந்த கல்லூரியில் எல்.எல்.எம். படித்த ஒரு பெண், கடந்த மாதம் 28ம் தேதியன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் அவர் முகத்தை மறைத்தபடி அழுது கொண்டே பேசியிருந்தார். அதில், சின்மயானந்த் தன்னை ஓராண்டாக மிரட்டியே பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். இதனால், பல்வேறு பிரச்னைகளை அவர் சந்தித்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன்பின், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, உ.பி.யில் சிறப்பு புலனாய்வுக் குழு அந்த மாணவி சொன்ன பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, சின்மயானந்த்தை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் திடீரென பாலியல் புகார் கொடுத்த மாணவியையும் கைது செய்தனர். அவரது உறவினர்களான சஞ்சய், சந்தீப், விக்ரம் ஆகியோரையும் கைது செய்தனர். இது குறித்து, உ.பி. டிஜிபி சிங் கூறுகையில், சின்மயானந்த்திடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக அந்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு எதிராக பல ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஏற்கனவே கைதான அவரது உறவினர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பலாத்கார குற்றவாளியை காப்பாற்றுவதற்காக புகார் கொடுத்த மாணவியை தண்டிப்பதா? என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. மேலும், அந்த மாணவிக்கு ஆதரவாக ஷாஜகான்பூரில் இருந்து லக்னோ வரை 180 கி.மீ. தூரத்திற்கு பாதயாத்திரை செல்ல காங்கிரசார் நேற்று முயற்சித்தனர். முன்னாள் அமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமையில் காங்கிரசார் நீதிகேட்டு யாத்திரை செல்ல முயன்ற போது அவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், அதிகார மமதையில் இருக்கும் உ.பி. மாநில பாஜக அரசு, ஜனநாயகத்தை அழித்து கொண்டிருக்கிறது. ஒரு பலாத்கார குற்றவாளியை காப்பாற்றுவதற்காகவும், ஷாஜகான்பூர் மாணவியின் குரலை ஒடுக்குவதற்கும் எந்த எல்லைக்கும் பாஜக அரசு செல்லும். காங்கிரசார் போராட்டம் நடத்தப் போகிறார்கள் என்றதுமே அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கிறார்கள். அனைவரையும் கைது செய்கின்றனர். நீங்கள் எவ்வளவு தூரம் அடக்க நினைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமாக நீதிக்கான குரல் ஒலிக்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, சின்மயானந்த் ஜாமீன் மனுவையும், மாணவியின் ஜாமீன்மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.