சாரதா சிட்பண்ட் வழக்கில் முன்னாள் கமிஷனருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்..
சாரதா சிட்பண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கொல்கத்தா ஐகோர்ட் முன் ஜாமீன் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த முறைகேடுகளில் மம்தாவின் உறவினர்கள் மற்றும் திரிணாமுல் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்்றம்சாட்டப்பட்டிருக்கிறது. சிலர் இது தொடர்பாக கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த மோசடி வழக்குகளில் ஆவணங்களை திருத்தம் செய்து திரிணாமுல் கட்சியினரை காப்பாற்ற அப்போதைய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் முயன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதற்காக அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கொல்கத்தாவுக்கு சிபிஐ படை சென்றது. அப்போது அவர்கள் போலீஸ் கமிஷனரிடம் விசாரிக்க அனுமதிக்காமல் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார்.
இதன்பின், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ராஜீவ்குமாருக்கு சம்மன் அனுப்பி, ஷில்லாங்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் இன்று(அக்.1) ராஜீவ்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கியது. சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க விரும்பினால், 48 மணி நேரத்திற்கு முன்பாக அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தற்போது ராஜீவ் குமார், மேற்கு வங்க குற்றப்புலனாய்வுத் துறையில் பணியாற்றி வருகிறார்.