ஆயுதபூஜை, தீபாவளிக்காக 10,940 பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்து அமைச்சர் தகவல்

ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆயுதபூஜை விடுமுறை நாட்கள் வருவதால், இப்போது முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மொத்தம் 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி தினத்தையொட்டி மட்டும் 4,265 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை திரும்பி வர 4,627 பேருந்துகள் இயக்கப்படும். ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். திருப்பூரில் இருந்து மற்ற ஊர்களுக்கு 280 பேருந்துகளும், கோயம்புத்தூரில் இருந்து மற்ற ஊர்களுக்கு 717 பேருந்துகளும், பெங்களூருவில் இருந்து மற்ற ஊர்களுக்கு 245 பேருந்துகளும் இயக்கப்படும்.

சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் தலா ஒரு மையம் என்று மொத்தம் 30 மையங்கள் திறக்கப்படுகின்றன. இந்த மையங்களில் நாளை முதல் முன்பதிவு துவங்கும்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

More News >>