நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு.. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்?

 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாலும், பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருகிறது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் உதித் சூர்யா, தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் சேர்ந்துள்ளார். இவர் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின், நீட் தேர்வில் மேலும் பலரும் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.

இதனால், வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது, சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட்டின் நேரடி மேற்பார்வையில், தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இது வரை மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன். மாணவர் பிரவீன், அவரது தந்தை சரவணன். மாணவர் ராகுல், அவரது தந்தை ஜெகதீஷ். மாணவர் இர்பான், அவரது தந்தை முகம்மது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாணவி அபிராமி, அவரது தந்தை மாதவன் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்ட  மாணவன் இர்பான் நேற்று  சேலம் கோர்ட்டில் சரணடைந்தார் அவரை வருகிற 9ம் தேதி வரை சிறையில் அடைக்க சேலம் 2வது நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவா உத்தரவிட்டார். இதன்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.  அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்

இர்பானின் தந்தை முகமது சபி இந்த ஆள் மாறாட்ட மோசடியில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் மூலம்தான் நீட் ஆள்மாறாட்ட புரோக்கர்கள், மாணவர்களை பிடித்துள்ளனர். முகமது சபி தெரிவித்த தகவலின்படி, திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற புரோக்கர் நேற்று(அக்.1) கைது செய்யப்பட்டார். மேலும், வேதாச்சலம், முகமது ரஷீத் என்ற 2 புரோக்கர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 இந்தநிலையில், நீட் தேர்வு முறைகேட்டில் மேலும் 25 மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரத்தை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்து விட்டது. அந்தக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் படித்த 30 மாணவர்கள் வேறு எந்த கல்லூரியிலும் சேர்க்கப்படவில்லை. அவர்கள்தான் நீட் தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், பல மாநிலங்களில் இந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி நடைபெற்றுள்ளது என்றும், மோடியில் ஈடுபட்டவர்கள்  நெட்வொர்க் அமைத்து முறைகேடு செய்துள்ளனர் என்பதும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதாவது, ஆள் மாறாட்டம் செய்பவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று கொடுத்தால், அதற்கேற்ப அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தரப்பட்டிருக்கிறது. முறைகேட்டில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாணவரும் ஒரு கோடிக்கும் மேல் பணம் கொடுத்துள்ளனர். நீட் தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் எந்த மாநிலத்திலும் தேர்வு எழுதலாம் என்ற விதியை பயன்படுத்தி இந்த முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆள் மாறாட்ட மோசடிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த மோசடி வழக்கில் பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றலாமா என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இது தொடர்பான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>