இஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் மர்ம மரணம்.. அடித்து கொலையா?
ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி சிவக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வீட்டில் தனியாக வசித்த அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி சிவக்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
சிவக்குமாரின் மனைவி இந்திராவும், மகளும் சென்னையில் வசிக்கின்றனர். மகன் அமெரிக்காவில் இருக்கிறார். இந்திரா, சென்னையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். இந்நிலையில், சிவக்குமார் நேற்று(அக்.1) அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நேற்று முன் தினம் மாலையில் அவர் அலுவலகத்தில் இருந்து வந்த போது மழையில் நனைந்திருந்ததாகவும், நேற்று அவர் வேலைக்கு செல்லவில்ைல என்றும் அக்கம்பக்கம் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
எஸ்.ஆர்.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணா கூறுகையில், சிவக்குமாரின் தலையில் பின்புறம் மூன்று இடங்களில் காயம் உள்ளது. அவர் எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டாரா என்பது விசாரணைக்கு பின்புதான் தெரியும் என்றார்.
சென்னையில் இருந்து சிவக்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர், ஐதராபாத்திற்கு நேற்றே புறப்பட்டு சென்றுள்ளனர்.